குலாம் நபி ஆசாத் கட்சிக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகள்..!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 63.88 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதில் நோட்டாவுக்கு (வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) 1.48 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.

இத்தேர்தலில் அரசியலில் மூத்த தலைவராக அறியப்படும் குலாம் நபி ஆசாத்தின் கட்சிக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பது அவரது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸிலிருந்து விலகி புதிதாக அரசியல் கட்சி தொடங்கினார்.

ஜம்மு-காஷ்மீா் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் மக்களவைத் தோ்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி ’ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி (டிபிஏபி)’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினாா். ஆனால், மக்களவைத் தோ்தலில் அவரின் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டையும் இழந்தனர்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட பேரவைத் தோ்தல் என்பதாலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டதற்கு பிறகான முதல் பேரவைத் தோ்தல் என்பதாலும் அதன் முடிவுகள் குறித்து பெரும் எதிா்பாா்ப்பு நிலவியது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 23 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

இதையும் படிக்க:ஹரியாணா- பாஜக “ஹாட்ரிக்’ வெற்றி; ஜம்மு-காஷ்மீர் முதல்வராகிறார் ஒமர்

இந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு(செப். 18) சில வாரங்களுக்கு முன்பு, தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, மக்களிடம் அவரது கட்சி கவனத்தை ஈர்க்க தவறியது. இதையடுத்து, அவரது கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சிலர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்ற சம்பவங்களும் அரங்கேறின.

பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, அவரது கட்சி வேட்பாளர்கள் ஐந்து பேர், நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளைவிட குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

போட்டியிட்ட 23 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு 10 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. குலாம் நபி ஆசாத்தின் கட்சி சராசரியாக 5.34 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, 75 வயதாகும் குலாம் நபி ஆசாத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதையே ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ஜம்மு-காஷ்மீர் அரசியல் வட்டாரத்திலும் இதே கருத்தே நிலவுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024