Sunday, October 20, 2024

ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று (அக். 9) நள்ளிரவு மும்பையில் காலமானார்.

ஒரு தொழிலதிபர் மறைவுக்கு நாடே துக்கம் அனுசரிக்கிறது. காரணம், அவர் தொழில் மேம்பாட்டில் நாட்டை முன்னேற்றுவதுடன் மட்டுமல்லாது, நாட்டில் உள்ள ஏழை மக்களின் நலனிலும் அக்கறை காட்டினார்.

தொழில் துறையில், குறிப்பாக உற்பத்தித் துறையில் இருந்த பல சவால்களை சரியான திட்டமிடல் மற்றும் முடிவுகள் மூலம் தீர்வு கண்டவர்.

இந்தியாவில் உற்பத்தித் துறை மிகவும் மோசமான காலகட்டத்தில் இருந்தபோது, ரத்தன் டாடா மேற்கொண்ட முயற்சியால், பின்னாளில் உலக நாடுகள் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு உதாரணமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை சொந்தமாக்கியதைக் கூறலாம்.

2008-ல் உலக நாடுகளின் வாகன உற்பத்தித் துறை இந்தியாவை உற்றுநோக்கியது. ஃபோர்டுக்குச் சொந்தமான பிரிட்டிஷைச் சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் நிறுவனத்தை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து டாடா நிறுவனம் சொந்தமாக்கியதே இதற்குக் காரணம்.

அந்தகாலகட்டத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துக்குப் போட்டியாக இதனைச் செய்தார் ரத்தன் டாடா.

இதனை 'நீல் ஆம்ஸ்ட்ராங் நிலை‘ என்கிறது இந்திய வாகன உற்பத்தித் துறை உலகம். அதாவது, ரத்தன் டாடாவின் இத்தகைய செயல் டாடா நிறுவனத்துக்கு ஒரு சிறிய முதல் அடி போன்றது. ஆனால், நாட்டின் உற்பத்தித் துறைக்கு இது மிகப்பெரிய மைல்கல்.

இது இரண்டையும் தவிர்த்து, தனிப்பட்ட முறையில் ரத்தன் டாடாவுக்கு இது மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஒருவகையில் அவமானத்திற்கு போட்டுக்கொண்ட மருந்து.

அதென்ன அவமானம்?

இதற்கு விடை 1998-ல் உள்ளது. அந்த ஆண்டில் டாடா நிறுவனம் இண்டிகா காரை அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் டீசல் எரிவாயு பயன்பாட்டு கார். முதல்முறையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமான காரும் கூட.

நாளடைவில் விற்பனை மந்தமானதால், மேலும் இழப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக உற்பத்திப் பிரிவை அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முயற்சித்தார். இதற்காக அங்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டு, சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை.

(பில் ஃபோர்டு, ரத்தன் டாடாவை மறைமுகமாக நிராகரித்ததாகவே அப்போது செய்திகளும் வெளியாகின.) இந்தியாவில் கார் உற்பத்தியைத் தொடங்கியிருக்கக் கூடாது என்றும், டாடாவின் உற்பத்திப் பிரிவை வாங்குவது, அந்த நிறுவனத்துக்குத்தான் சாதகமே (லாபம்) தவிர, புதிய உற்பத்தியை தொடங்குபவர்களுக்கு அல்ல என வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் மனம் வருந்திய ரத்தன் டாடா, இந்திய வாகன உற்பத்தித் துறையின் மீதான கணிப்பையும், தன் மீதான நம்பிக்கையின்மையையும் மாற்றிக்காட்ட வேண்டும் என்ற தெளிந்த குறிக்கோளுடன் நாடு திரும்பினார்.

9 ஆண்டுகளில், டாடாவின் விருப்ப காரான இண்டிகா, பல்வேறு மேம்பாடுகளுக்குப் பிறகு அதிகம் விற்பனையாகும் காராக மாறியது. 2004 -ல் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதியானது. 2007 -ல் இண்டிகாவின் உள்நாட்டு விற்பனை 1.42 லட்சம் கார்களாக அதிகரித்தது.

இண்டிகாவின் விற்பனை உச்சம் தொட்ட மறு ஆண்டே, ஃபோர்டு நிறுவனம் சரிவைச் சந்தித்தது. அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையால் ஃபோர்டு நிறுவனம் கிட்டத்தட்ட திவாலானது.

இதனால் ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவரை விற்க ஃபோர்டு முடிவு செய்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார் ரத்தன் டாடா. ஃபோர்டுக்கு சாதகமாக இந்திய நிறுவனம் உதவுவதாக அப்போது செய்திகள் வெளியானது. ஒரு பழிவாங்கல்போல, ஃபோர்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் பேசினார் ரத்தன் டாடா. தனிப்பட்ட முறையில் பழிவாங்கலாக இருந்தாலும், இந்திய வாகன தொழில் துறைக்கு இது பேருதவியாக இருந்தது. அப்போது பட்ட அவமானத்துக்கு மருந்தாகவும் இருந்தது.

வேதாந்த் பிர்லா பாராட்டு

ஜாகுவார், டாடாவுக்குச் சொந்தமான ஆரம்பக்கட்டத்தில் விற்பனையில் மந்தநிலை இருந்தது. ஆனால், தற்போது உலகின் மிக மதிப்புமிக்க ஸ்போர்ட்ஸ் சொகுசுக் கார்களில் ஒன்றாக மாறியுள்ளது ஜாகுவார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கூட விற்பனையில் சாதனை என்று சொல்லும் அளவுக்கு லேன்ட் ரோவர் கார்களின் விற்பனை இருந்தது.

ஜாகுவார் லேன்ட் ரோவர் அல்லது ஜே.எல்.ஆர். நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2011ஆம் ஆண்டு 9,871 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. ஆனால், 2018-ல் 25,000 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது. 2023- 24 நிதியாண்டில், 4 லட்சம் கார்களை விற்பனை செய்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

கடின உழைப்பு, இலக்கு, தோல்வியிலிருந்து மீண்டெழுதல் என்றால் என்னவென்பதை ரத்தன் டாடாவின் மூலம் உலகம் அறிந்துகொண்டதாக பிர்லா குழுமத் தலைவர் வேதாந்த் பிர்லா தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024