ஆயுத பூஜை: பூக்களின் விலை உயர்வு

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

ஆயுதபூஜையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் வழிபாட்டிற்கு தேவையான பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மக்கள் கடை வீதிகளில் குவிந்துள்ளனர். ஆயுதபூஜையையொட்டி தமிழ்நாட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் மல்லிகை, முல்லை, அரளி, சம்பங்கி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லி ரூ.900க்கு, ஐஸ் மல்லி ரூ.700க்கு என விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.450, பன்னீர் ரோஸ் ரூ.160, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.250, கனகாம்பரம் ரூ.1,000, சாக்லேட் ரோஸ் ரூ.400, அரளி பூ ரூ.420க்கு விற்பனையாகிறது.

கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில், ஆயுத பூஜையையொட்டி விற்பனைக்காக சுமார் 250 டன் பூக்கள் வந்துள்ளன. பூக்களின் விலையும் நேற்றை விட இன்று அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.700 ஆகவும், அரளி கிலோ ரூ.250-ல் இருந்து ரூ.450 ஆகவும் விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி ரூ.700-க்கும், முல்லை – ரூ.600-க்கும், பிச்சி – ரூ.600-க்கும், கனகாம்பரம் – ரூ.800-க்கும், சம்மங்கி – ரூ.300-க்கும், செவ்வந்தி – ரூ.150-க்கும், அரளி – ரூ.700-க்கும், மரிக்கொழுந்து – ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024