Friday, October 11, 2024

அறத்துடன் கூடிய தொழிலுக்கு அளவுகோலாக திகழ்ந்தவர்: ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அறத்துடன் கூடிய தொழிலுக்கு அளவுகோலாக திகழ்ந்தவர்: ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: மிகச்சிறந்த தேசியவாதியும், ஒப்பற்ற தொழிலதிபரும், எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மனிதருமான ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவு ஒரு மிகப்பெரிய தேசிய இழப்பு.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரத்தன் டாடாவின் தொலைநோக்கு மிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும் புதுமையிலும் மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியா தடத்தை அவர் பதித்துச் சென்றுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: நவீன இந்தியாவை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் ரத்தன் டாடாவின் வரலாறு மக்களை ஊக்குவிக்கும்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தொழில் நேர்மை, வள்ளல் தன்மை, சமூக சேவை போன்றவற்றால் முன்மாதிரியாகத் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டுக்கே பேரிழப்பாகும்.

துணை முதல்வர் உதயநிதி: தொழிலில் நேர்மையைக் கடைபிடித்து, சமூகத்தை உயர்த்த பாடுபட்ட ரத்தன் டாடா, நாட்டுக்கும், மக்களுக்கும் அளவிட முடியாத பங்களிப்பை செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சேவைக்கும், இரக்கத்துக்கும் புதியதொரு அர்த்தத்தை வழங்கி வாழ்ந்து காட்டியவர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தொழில் வளர்ச்சியோடு, தொழிலாளர் நலன், சமூக நலனில் அக்கறை காட்டக்கூடிய மனிதநேயப் பண்பாளராகத் திகழ்ந்தவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டாவை விலக்கிவிட்டு எழுத முடியாது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்தியாவின் தொழில் வளத்தை கோபுரமாக உயர்த்தி காட்டியவர் ரத்தன் டாடா. திரட்டிய பணத்தை மனிதாபிமானத்தோடு ஏழைமக்களுக்கு செலவு செய்ய ஏற்பாடு செய்தவர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நாட்டின் வளத்துக்கு அடித்தளமிட்ட டாடா குடும்பத்தின் வழிவந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வில் தீபம் ஏற்றி, இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இந்திய பொருளாதாரத்திலும் மக்கள் வாழ்வியலிலும் இரண்டறக் கலந்தவர்.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: எளிய மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற புரட்சிகர சிந்தனையை வணிகத்தில் வென்றெடுத்த பெருந்தகை.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தொழிலில் நேர்மையை கடைபிடித்து தன் தொலைநோக்கு சிந்தனையால் டாடா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றிய ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஒருமைப்பாடு, நெறிகொண்ட தலைமைப் பண்பு, இரக்கம் ஆகிய குணங்களைப் பெற வேண்டும் என்பதற்கு அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தனது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றையே உண்மையான செல்வமாகக் கொண்டிருந்தவர்.

நடிகர் ரஜினிகாந்த்: தனது தொலைநோக்கு பார்வையால் உலக வரைபடத்தில் இந்தியாவை எடுத்துரைத்த மாமனிதர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் எம்.பி. சரத்குமார், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024