Saturday, October 19, 2024

50 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஏரி… சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

உலகின் மிகவும் வறண்ட பகுதியான சஹாரா பாலைவனத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கோடைக் காலம் முடிந்த பின்னர் மிக மிகக் குறைந்த அளவிலேயே மழை பெய்யும். கடந்த மாதம் 2 நாள்கள் இந்தப் பகுதியில் பெய்த கனமழை, ஆண்டுதோறும் பெய்யும் சராசரியை விட அதிகமாக சில இடங்களில் பெய்திருந்தது.

இதனால், அங்குள்ள இரிக்கி ஏரி அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள சஹாரா பாலைவனப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் பனை மரங்கள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன.

நீரில் மூழ்கிய பனைமரங்கள்

மொராக்கோவில் மழை மிக மிகக் குறைவாகப் பெய்யும் பகுதியான டாட்டாவில் திடீரென பெய்த மழையால் 24 மணி நேரத்தில் 100 மி.மீ அளவிலான மழை பதிவாகியிருந்தது.

கடந்த 30 முதல் 50 ஆண்டுகளில் இப்போது தான் மிகக் குறைந்த காலத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று மொராக்கோ வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஹுசைன் யூபெப் தெரிவித்தார்.

இதையும் படிக்க: போர் மேகம்.. அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்தோர் அமைப்புக்கு நோபல்! காரணம்?

இதை வெப்ப மண்டலப் புயலாகக் குறிப்பிடும் வானிலை ஆய்வாளர்கள், இந்த மழை மூலம் அந்தப் பிராந்தியத்தின் காலநிலைகள் வரும் காலங்களில் மாற்றத்தைச் சந்திக்கும் என்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாவதால் ஆவியாகும் நிகழ்வு ஏற்பட்டு மேலும் புயல்கள் வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வறண்டு கிடந்த நிலத்தில் தற்போது பெய்துள்ள மழையால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயரும் என்று இங்குள்ள விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள நீர்த் தேக்கங்கள் கடந்த மாதத்தில் நிரம்பியுள்ளன. ஆனாலும், நீண்டகால வறட்சியின் காரணமாக நீர்த் தேக்கங்களின் நிலைமை குறித்து நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா: மில்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்த கனமழை காரணமாக அல்ஜீரியா மற்றும் மொராக்கோவில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்தனர். அவசரகால நிதி உதவியாக மொராக்கோ அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024