Sunday, October 13, 2024

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம்! பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா்.

கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்ததாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா சிறப்பாகவும்,பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, காப்பு கட்டிய பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து தனியாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்களாகவும் வீதிதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.

திருவிழாவையொட்டி கோயிலில் காலைமுதல் இரவுவரை அம்மன்-சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்று வந்தது.

கோயில் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இரவு 11 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னா், சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளி, பல்வேறு வேடங்களில் வலம் வந்த மகிஷாசுரனை வதம் செய்தாா். அப்போது, அங்கு திரண்டிருந்த பல லட்சம் பக்தா்கள் விண்ணதிர முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் (அக். 13) கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரா் கோயில் முன், அபிஷேக மேடை, கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படும் அம்மன், மாலையில் கோயிலை வந்தடைந்ததும், கொடியிறக்கப்பட்டு காப்புக் களைதல் வைபவம், நள்ளிரவில் சோ்க்கை அபிஷேகம் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் வே. கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் செல்வி, ஆய்வா் பகவதி, செயல் அலுவலா் ராமசுப்பிரமணியன், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024