Monday, October 14, 2024

ஆயுதபூஜையை ஒட்டி வீதிகளில் தேங்கும் குப்பைகள்: திருப்பூர் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்துமா?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ஆயுதபூஜையை ஒட்டி வீதிகளில் தேங்கும் குப்பைகள்: திருப்பூர் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்துமா?

திருப்பூர்: ஆயுதபூஜை திருவிழாவை ஒட்டி, திருப்பூர் மாநகர வீதிகளில் தேங்கும் குப்பையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களின் நலனும், குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் நலனும் ஒருசேர பாதுகாக்கப்பட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் 600 மெட்ரிக் டன் கணக்கில் நாள்தோறும் அப்புறப்படுத்தப்படுகிறது. ஆயுதபூஜை நாட்களில் குப்பைகள் அதிகளவில் வெளியேறும். அதிலும் குறிப்பாக திருப்பூர் தொழில் நகரம் என்பதால் பனியன் நிறுவனங்களின் குப்பைகள், தொழிற்சாலைகளின் குப்பைகள் மற்றும் வீடுகளின் குப்பைகள் என வீதிதோறும் குப்பைகள் மலைபோல் தேங்குகிறது. இந்த நாட்களில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் மாநகரில் 60 வார்டுகளில் சுமார் 15 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழில் வர்த்தக வாய்ப்பு பிரதேசமாக திருப்பூர் இருப்பதால், மாநகரில் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு மாநகராட்சிக்கு உள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாநகர மக்கள் கூறும்போது, “மாநகர வீதிகளில் குப்பைகள் தொடர்ந்து தேங்குகிறது. ஈக்கள், கொசுக்கள் தொந்தரவு ஏற்கெனவே இருந்துவரும் நிலையில் தற்போது மழையும் பெய்திருப்பதால் சுகாதாரப் பணிகளில் சுணக்கம் நிலவுகிறது. தொடர்ச்சியாக குப்பைகளை அப்புறப்படுத்தினாலே, மாநகரின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். தற்போது மழை மற்றும் நோய்தொற்று காலம் என்பதால், சுகாதார பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. மாநகராட்சி நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகரின் தூய்மைப் பணியில் 400 நிரந்தர ஊழியர்கள், 4 மண்டலங்களிலும் உள்ள 60 வார்டுகளும் சேர்ந்து 1943 தனியார் நிறுவனத்தின் கீழ் அவுட்சோர்சிங் தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 333 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கமாக நாள் ஒன்றுக்கு 600 மெட்ரிக் டன் குப்பைகள் வெளியேற்றப்படும். கூடுதலாக ஆயுதபூஜை, விஜயதசமி நாட்களில் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 700 மெட்ரிக் டன் என மொத்தம், நாளொன்றுக்கு 1300 மெட்ரிக் டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது.

இதற்காக ஊழியர்களுக்கு கூடுதல் பணிக்கேற்ப, கூடுதல் ஊதியம் சேர்த்து வழங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடங்களில் மழை பெய்திருப்பதால் அள்ளுவதில் சுணக்கம் நிலவுகிறது. தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு தூய்மை பணிகள் நடைபெறும். தொழிலாளர்களும் கையுறை, மழை அங்கி உள்ளிட்டவை இன்றிதான் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபடுகிறோம். அவை போதிய அளவிலும், கூடுதல் தரத்திலும் வழங்கப்படுவதில்லை. இதனால் தொழிலாளர்கள் தங்கள் கைகளால் குப்பைகளை அள்ளுகிறார்கள். இதனால் நோய்தொற்று உள்ளிட்டவைகளுக்கும் ஆளாகிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன் கூறும்போது, “வழக்கமாக 600 டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். இந்த மூன்று நாட்களில் வழக்கமான குப்பைகளைக் காட்டிலும், மேலும் 3 மடங்கு கூடுதலாக நாள் ஒன்றுக்கு 700 டன் கூடுதலாக என 2100 மெட்ரிக் டன் குப்பைகள் அள்ளப்படும். துப்புரவு பணியில் போதிய தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுக்கு கூடுதல் பணிக்கேற்ப ஊதியம் சேர்த்து வழங்கப்பட்டு, தொடர்ச்சியாக தூய்மைப் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுகிறது. மழை அங்கி, கையுறை, காலுறை உள்ளிட்டவை தொடர்ச்ச்சியாக தருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம்? – ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கராஜ் கூறும்போது, “திருப்பூர் மாநகரில் பணியாளர்களுக்கு மழைஅங்கி கொடுத்து நீண்ட காலமாகிவிட்டது. கையுறை, காலுறை மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவை உரிய அளவுகளில் வழங்க வேண்டும். சிறியது மற்றும் பெரியதாக மாற்றி, மாற்றி வழங்குவதால் அவர்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது.

மாநகராட்சி நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதால், கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாநகரில் 2300 தூய்மை பணியாளர்கள் சந்திக்கும் அவலத்தை போன்றே, உடுமலை, தாரபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் மற்றும் திருமுருகன்பூண்டி என 6 நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை நாள்தோறும் சந்திக்கின்றனர்.

6 நகராட்சிகளில் பணியாற்றும் 800-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்களையும் நலனையும், அரசும், உள்ளாட்சி அமைப்புகளும், கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ள வேண்டியது காலத்தின் தேவை” என்று அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024