Monday, October 14, 2024

விஜய் மாநாடு – தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு திடலின் எதிரில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார்.

இந்த சூழலில் மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநாட்டுக்கான களப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் மாநாட்டு பணிகளுக்கென ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள குழு தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மாநாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

விஜய் அமைத்துள்ள மாநாட்டு குழுவில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு ஒருங்கிணைப்பாளர், 12 குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். மாநாட்டு வரவேற்பு குழுவில் 10, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் 14, சுகாதார குழுவில் 55 பேர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில் 104 பேரும், வாகன நிறுத்த குழுவில் 41 பேரும் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மகளிர் பாதுகாப்பு குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு 111 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேடை ஒருங்கிணைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, மாநாட்டு தீர்மான குழு, உபசரிப்பு குழு, பந்தல் அமைப்பு குழு, உணவு வழங்கல் குழுவினர் என 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கான பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு பணிக்கான தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா வருகிற 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், தலைவரின் ஆணைப்படி. சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

#மாநாட்டுத்_தொகுதிப்_பொறுப்பாளர்கள்#தவெக_மாநாடு#விக்கிரவாண்டி#வி_சாலை@tvkvijayhq@BussyAnand
(1/3) pic.twitter.com/RpgwwZ2F2p

— TVK Party Updates (@TVKHQUpdates) October 13, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024