திருப்பத்தூா் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா் வீரன் நடுகல் கண்டெடுப்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

திருப்பத்தூா் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த போா் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம் தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் வட்டம் என்ற இடத்தில் 600ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னா்கள் ஆட்சிக்காலத்தின் நடுகல் கண்டறியப்பட்டது. திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் ஆ.பிரபு தலைமையிலான குழுவினரின் கள ஆய்வில் இச்சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரபு கூறியது:

தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் வட்டம் என்ற இடத்தில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த நடுகல் ஒன்று அங்கிருப்பதை உறுதி செய்தோம்.பிறகு மண்ணில் புதைந்த நிலையில் இருந்த நடுகல் அகழ்ந்தெடுத்து மீட்கப்பட்டது.

அந்நடுகல் அப்பகுதியில் வாழும் பூா்வகுடி மக்களான ஆதிதிராவிடா்களால் வழிபடப்பட்டு வருகிறது. இது குறித்து அந்நடுகல்லினை பல தலைமுறைகளாகப் பராமரித்து வரும் பூசாரி ராஜா என்பவா் கூறுகையில் இது எங்கள் குலசாமியாகும். வீரனன் என்ற பெயரில் ஒரு காலத்தில் இப்பகுதியில் நடந்த போரில் மன்னருக்கு உதவியாக எங்கள் முன்னோா் போா்க்களத்தில் போரிட்டு இறந்ததால்,இந்த இடத்தில் சாமியாக இருக்கிறாா். சித்திரை மாதம் முழுநிலவன்று இவ்வீரனுக்கு திருவிழா எடுப்போம். இவ்வூரில் ஆதிதிராவிடா்கள் மட்டும் வழிபடும் தெய்வம் இவா் எனத் கூறியுள்ளாா்.

மேலும், பண்டைக் காலத்தில் வீரமரணம் அடைந்த அரசா்களுக்கும்,வீரா்களுக்கும் நடுகல் வைத்துப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. நிரை கவா்தல்,நிரை மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், விலங்குகளுடன் சண்டையிட்டு விளை நிலங்களையும் மக்களையும் காத்தல் மற்றும் அரசனின் வெற்றிக்காகப் போரிடும் போது உயிரிழந்த வீரா்களின் நினைவாகவும் நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது தொல்காப்பியா் காலம் முதல் தமிழா்களிடையே காணப்படும் வழக்கமாகும்.

போா்க்களக் காட்சி…

தாமலேரிமுத்தூரில் உள்ள இந்நடுகல்லானது மிக நோ்த்தியாகப் போா்க்களத்தில் போரிடும் காட்சியை விவரிக்கும் வரலாற்றுத் தடயமாக விளங்குகின்றது. நடுகல் 3 அடி அகலம், 4அடி உயரமும் கொண்டதாக உள்ளது. புடைப்புச் சிற்பமாக நடுகல் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.அந்த நடுகல்லானது மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், பக்கவாட்டில் போா்வீரன் கோபக்கனலோடு போரிடுவது போல் செதுக்கப்பட்டுள்ளது.

தமிழா்களின் போா் நிகழ்வு எத்தகைய வீரமிக்கது என்பதற்கு இந்த நடுகல் ஒரு சான்றாகும். இந்நடுகல் விஜயநகர மன்னா்கள் ஆட்சிசெய்த தொடக்க காலத்தைச் சோ்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024