இயக்குநர் பீம்சிங்கின் 100-வது பிறந்த நாள்… நடிகர் பிரபு நெகிழ்ச்சி!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இயக்குநர் பீம் சிங்கின் 100-வது பிறந்தநாளை நினைவுகூறியுள்ளார் நடிகர் பிரபு.

ஆரம்ப கால தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பீம் சிங். தனித்துவமான குடும்ப திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

1954 ஆம் ஆண்டு அம்மையப்பன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பீம் சிங், ’களத்தூர் கண்ணம்மா’, ‘பாசமலர்’, ‘பச்சை விளக்கு’, என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். நடிகர் சிவாஜியை வைத்து 19 படங்களை இயக்கிய இயக்குநர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் திரைப்படங்களை இயக்கினார்.

1924, அக். 15 ஆம் தேதி பிறந்த பீம் சிங், ஜன. 16, 1978 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார். சரியாக, இன்றுடன் அவருக்கு 100 வயது.

இயக்குநர் பீம் சிங்.

இந்த நிலையில், நடிகர் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு பீம் சிங் குறித்த நினைவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “இன்று இயக்குநர் ஏ.பீம்சிங் அவர்களின் நூறாவது பிறந்தநாள்… பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு…
இந்த நாளில் அவரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அப்பா அவரை பீம் பாய் என்றுதான் செல்லமாக அழைப்பார்.

அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர். அவரை 'செந்தாமரை' படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து 'அம்மையப்பன்', 'ராஜா ராணி' படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய 'பதி பக்தி' படத்திலும் நடித்தார்.
மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா நடிப்பில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, சாந்தி, பாலாடை, பாதுகாப்பு போன்ற பத்தொன்பது படங்களை இயக்கினார்.

சிவாஜி – பாசமலர்.

அவர், சாந்தி படத்தின் இந்தி பாதிப்பை சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சுனில்தத் நடிப்பில் கௌரி என்கிற பெயரில் இயக்கினார். அதே போல சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் 'பாசமலர்' படத்தை இந்தியில் 'ராக்கி' என்கிற பெயரில் அசோக்குமார் நடிப்பில் இயக்கினார்.
இப்படி தமிழ் படங்களின் பெருமையை இந்தி் வரை கொண்டு சென்ற பெருமைக்குரிய இயக்குநர் பீம்சிங். காலத்தால் அழியாத பல காவிய படங்களை தந்தவர்… குடும்பக் கதைகளின் எதார்த்த இயக்குநர்… காட்சிகளில் எளிமை… வசனங்களில் புதுமை… பாடல்களில் இனிமை… தமிழ் சினிமாவின் ஆளுமை…. என்று திகழ்ந்தவர். அவருக்கு இன்று நூறாவது ஆண்டு என்கிற போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்… காலம் என்னவோ அவர்களை எடுத்துக் கொண்டுவிட்டது…

இதையும் படிக்க: கூலி – சென்னை படப்பிடிப்பில் அமீர் கான்?

ஆனால், அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை. படைத்தவருக்கும் அழிவில்லை… கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள்… அவர்கள் எப்போதும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்… பீம்சிங்கும் அய்யாவும் நமோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அன்புடன்.. பிரபு” என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024