Thursday, October 17, 2024

கொல்கத்தா விவகாரம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த டாக்டருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப். 16ம் தேதி மருத்துவக் குழுவுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதில் டாக்டர்கள் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை. இதனால் டாக்டர்கள் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது. இன்றுடன் 11வது நாளாக இளநிலை டாக்டர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்து வருகிறது.

நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 6 மணிக்கு இந்த போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கினர். சுமார் 12 மணி நேரம் தொடரும் இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சண்டிகாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரனீத் ரெட்டி கூறுகையில், "கொல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம். அரசு பதிலளிக்க வேண்டிய நேரம் இது. மருத்துவ மாணவர்களின் குரலை உயர்த்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். மருத்துவமனைகளில் அவசர சேவையானது முழு பலத்துடன் இயங்குகிறது. இந்த போராட்டத்தால் மருத்துவ சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது” என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024