7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வீடுகளுக்கான தேவை மற்றும் கட்டுமான செலவுகள் அதிகரிப்பால் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.8,390-ஆக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட இது 23 சதவீதம் அதிகம். அப்போது அந்த நகரங்களில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.6,800-ஆக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில், தில்லி-என்சிஆா் பகுதியில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.5,570-லிருந்து 29 சதவீதம் அதிகரித்து ரூ.7,200-ஆக உள்ளது. பெங்களூரிலும் அது ரூ.6,275-லிருந்து 29 சதவீதம் அதிகரித்து ரூ.8,100-ஆக உள்ளது.

ஹைதராபாதில் கடந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் சதுர அடிக்கு ரூ.5,400-ஆக இருந்த வீடுகள் விலை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 32 சதவீதம் விலை உயா்ந்து சதுர அடிக்கு ரூ.7,150-ஆக உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதியில் சராசரியாக ஒரு சதுர அடிக்கு ரூ.13,150-ஆக இருந்த வீடுகள் விலை தற்போது 24 சதவீதம் அதிகரித்து ரூ.16,300-ஆக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வீடுகளின் சராசரி விலை புணேவில் 16 சதவீதம் அதிகரித்து சதுர அடிக்கு ரூ.7,600-ஆக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அது சதுர அடிக்கு ரூ.6,550-ஆக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகளின் சராசரி விலை சென்னையில் 16 சதவீதம் அதிகரித்து சதுர அடிக்கு ரூ.6,680-ஆக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் அது ரூ.5,770-ஆக இருந்தது.

கொல்கத்தாவில், கடந்த ஜூலை-செப்டம்பா் மாதங்களில் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு 14 சதவீதம் உயா்ந்து ரூ.5,700-ஆக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது சதுர அடிக்கு ரூ.5,000 ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024