மழை பாதிப்பை அரசியலாக்க நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னை: மழை பாதிப்பை அரசியலாக்க நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மூன்று நாள்களாக தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. தொடர் மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வட சென்னை பகுதிகளிலும், புதன்கிழமை தென் சென்னை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, அந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

வீனஸ் நகரில் மழைநீர் வெளியேற்றும் நிலையம்

அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அங்கிருந்த மக்கள் முதல்வரிடம் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ரெட்டேரியை மேம்படுத்தும் பணி

நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவினையும் உயர்த்தி,

3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகினை சீரமைக்கும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பாலாஜி நகர் – மருத்துவ முகாம்

பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு நோய்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்திடும் பொருட்டு பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குமரன் நகர் சாலையில் உள்ள பாலாஜி நகரில் மருத்துவ முகாமினை முதல்வர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இம்முகாமில் 12 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு முட்டை, ரொட்டி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

தணிகாச்சலம் கால்வாய்

தொடர்ந்து, அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் ரூ.91 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் – சென்னை, பெரம்பூர், செம்பியம், ராகவா தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. புத்துயிர் சிறப்புப் பள்ளியில் பயிலும் 70 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 கணினிகள், 1 பிரிண்டர், 2 இரும்பு பீரோ, அத்தியாவசியப் பொருட்கள், என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், அச்சிறப்பு பள்ளியின் தாளாளர் எட்வின் ராஜ்குமாரிடம் பள்ளி மேம்பாட்டிற்காக நிதியுதவியும் முதல்வர் வழங்கினார்.

இதையும் படிக்க |நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கு உணவளித்த அரசு!

கொளத்தூர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மைப் பணியார்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவினை முதல்வர் ஸ்டாலின் பரிமாறி, அவர்களுடன் உணவருந்தினார்.

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. மழையின் போது, மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிலர் அரசியலாக்கி அதில் சிலர் ஆதாயம் தேட நினைக்கின்றனர் இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, என்ன பணிகள் நடைபெற்றிருக்கிறது என மக்களுக்கு தெரியும். எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது.

சென்னையில் ஏறக்குறைய அனைத்து பகுதிகளிலும் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது சில இடங்களில் தண்ணீர் இருந்தால் அதனையும் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. மாநகராட்சியின் பணி பாராட்டக்கூடிய அளவிற்கு இருந்துள்ளது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகளையும் ஊழியர்களையும் நான் பாராட்டுகிறேன். அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வருகிறது அதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்கிறார்கள் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை எங்கள் பணி மக்கள் பணி. அதனை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இதனைத் தொடர்ந்து, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், மழையின்போது ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு 600 தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர், அரிசி, ரெயின் கோட், புடவை, போர்வை, ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த்தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவினை முதல்வர் பரிமாறி, அவர்களுடன் உணவருந்தினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சுதர்சனம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் பி.கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024