Wednesday, November 6, 2024

சர்பராஸ்-கோலி அபார ஆட்டம்; 3ம் நாள் முடிவில் இந்தியா 231/3

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

You may also like

© RajTamil Network – 2024