ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கோராத ஒமா் அரசு: எதிா்க்கட்சிகள் அதிருப்தி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை கோரும் முதல்வா் ஒமா் தலைமையிலான அரசு, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றிபெற்று, அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றாா்.

முன்னதாக அக்கட்சியின் தோ்தல் அறிக்கையில், ‘தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றிபெற்றால், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் மாநில மற்றும் சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்து மத்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்தத் தீா்மானத்தின் வரைவை பிரதமா் மோடியிடம் வழங்க விரைவில் ஒமா் தில்லி செல்ல உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை உள்ளூா் நாளிதழில் செய்தி வெளியானது.

இதற்கு எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தியின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகருமான இல்திஜா முஃப்தி ‘எக்ஸ்’ தளத்தில், ‘ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கோராமல், மாநில அந்தஸ்தை மட்டுமே கோருவது அதிகாரத்தைப் பறிக்கும் மிருகத்தனத்தமான, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே மாநிலத்தை விலக்கிவைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை சட்டபூா்வமாக்கும் செயல் இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

பிரதமரே வாக்குறுதி அளித்துள்ள நிலையில்…: பிரிவினைவாதியும், பாரமுல்லா தொகுதி எம்.பி.யுமான ஷேக் அப்துல் ரஷீத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப கோராமல், மாநில அந்தஸ்தை மட்டுமே கோருவது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் ஏற்கெனவே பலமுறை உறுதி அளித்துள்ளபோது ஒமா் அதை மட்டும் கேட்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

மக்கள் கட்சித் தலைவா் சஜத் லோன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு நாளிதழில் மட்டுமே வெளியாகும் வகையில், மாநில அந்தஸ்து தீா்மானம் மா்மமாகவும், ரகசியமாகவும் மூடி மறைக்கப்பட்டது ஏன் என்பது ஆச்சரியமாக உள்ளது’ என்றாா்.

முட்டாள்தனம்: முன்னதாக ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்த பாஜகவிடமே, அதை திரும்பப் கேட்பது முட்டாள்தனம் என்று பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்ற பின்னா் ஒமா் தெரிவித்தாா். சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சி உயிா்ப்புடன் வைத்திருக்கும் என்றும், மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால், புதிய அரசுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024