Saturday, October 19, 2024

அதிமுக தலைமை பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

அதிமுக தலைமை பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர், மறைவுக்கு பிறகு,பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 4 முறை தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைத்தார். தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்டவற்றை தொடங்கி சாதனை படைத்தார். இவரது மறைவுக்கு பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்களால், கட்சி அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டது. மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் 7 மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் 3-ம் இடம்,கன்னியாகுமரியில் 4-ம் இடம், புதுச்சேரியில் 4-ம் இடம் என படுதோல்வியை அதிமுக சந்தித்தது.

இதன்மூலம், முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதல்வர் பதவியில் அமர்த்தியவர், முதல்வர்பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இந்தத் துரோகச் செயல் காரணமாக, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 45 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இன்று 20 சதவீதமாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட 'துரோகம்' தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது.அதன் வாக்கு சதவீதம் குறைந்துகொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும். தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும், பண்புள்ளவர்கள் அதைப்பனை அளவுக்குக் கருதிக் கொள்வார்கள் என்கிறது திருக்குறள். அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணையவேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும்.

எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். எனவே, "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி அதிமுகவை ஆட்சியில்அமர வைக்க உறுதி ஏற்போம்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024