Saturday, October 19, 2024

நவீன மீன் அங்காடியில் மட்டுமே விற்க வேண்டும்: மெரினா வளைவு சாலையில் இன்றுமுதல் மீன் விற்பனை செய்ய தடை

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நவீன மீன் அங்காடியில் மட்டுமே விற்க வேண்டும்: மெரினா வளைவு சாலையில் இன்றுமுதல் மீன் விற்பனை செய்ய தடை

சென்னை: மெரினா வளைவு சாலையில் இன்று (அக்.19) முதல் மீன் விற்க தடை விதிக்கப்படுகிறது. நவீன அங்காடியில் மட்டுமே விற்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா வளைவு சாலையில் ரூ.15 கோடியில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக.12-ம் தேதி திறந்துவைத்தார். இது 2 ஏக்கரில், 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன மீன் அங்காடியின் உள்ளேயும், வெளியேயும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வாகனக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்த நவீன மீன் அங்காடியில் நொச்சிக் குப்பம், நொச்சி நகர் மற்றும் டுமீல் குப்பம் பகுதிகளைச் சார்ந்த மீன் விற்பனை செய்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன் விற்பனை செய்பவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளைச் சார்ந்த ஒரு சிலர் மெரினா வளைவு சாலையில் தொடர்ந்து மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா வளைவு சாலையில் மேற்கண்ட பகுதிகளைச் சார்ந்த மீன் விற்பனை செய்பவர்கள் இன்று (அக்.19) காலை முதல் நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன்களை விற்க வேண்டும். அந்த சாலையில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் மீன்கள் வாங்க வரும் பொதுமக்களும் வளைவு சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி வளாகத்துக்குள் மட்டுமே மீன்களை வாங்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024