இந்திய தூதரகங்களை மூட வேண்டும்! கனடாவில் சீக்கியர்கள் பேரணி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஒட்டாவா: இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளது உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா மக்களை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு இந்திய அரசு துணை நிற்பதாக, இந்தியா மீது கனடா பிரதமர் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரமில்லை- கனடா பிரதமா்

இதையடுத்து, கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:கனடா பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டே இருதரப்பு உறவு சீா்குலைய காரணம்: வெளியுறவு அமைச்சகம்

முன்னதாக கடந்த ஆண்டு, ‘காலிஸ்தான்’ – சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்தி கனடாவில் உள்ள சா்ரே நகரில் போராடிய பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். எனினும் இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தால் இந்தியா, கனடா உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: கனடா பிரதமர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளன. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கனடாவின் வான்கோவெர் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் வான்கோவெரைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் வெள்ளிக்கிழமை(அக். 18) பெருந்திரளாகப் பேரணியாகச் சென்று வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் உயிரிழந்து 480 நாள்கள் ஆவதை நினைவுகூரும் வகையில் டோரண்டோவிலும் சீக்கிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது, வான்கோவெர் மற்றும் டோரண்டோவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளை, கனடாவில் வாழும் சீக்கியர்களை பாதுகாப்பதற்கான நேர்மறையானதொரு நடவடிக்கையாகப் பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த நடவடிக்கை மட்டும் போதாது என்றும், கனடாவின் பிற பகுதிகளிலும் இந்திய தூதரக அலுவலகங்கள் செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கனடாவிலுள்ள சீக்கியர்களின் தற்போதைய மனநிலை:

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சீக்கிய அமைப்பைச் சேர்ந்த இம்ரன் கௌர் கூறுகையில், “சீக்கியர்கள் புனித இடமாகக் கருதும் குருத்வாராவில் வைத்து நிஜ்ஜார் கொல்லப்பட்டது, சீக்கியர்களுக்கானதொரு சமிக்ஞையாகவே பார்க்கிறோம்.

சீக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஓரிடமாகவே குருத்வாராவைக் கருதுகிறோம். ஆனால், குருத்வாராவின் பின்பக்க வாயிலில் வைத்து எங்கள் தலைவரை(நிஜ்ஜார்) கொல்ல இந்தியா உதவியுள்ளது. இதன்மூலம், சீக்கியர்கள் தங்களுக்கான நிலத்துக்கு உரிமை கோரினால், சீக்கியர்கள் எந்த இடத்தில் வைத்து வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதை தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நேரத்தில், ஒட்டுமொத்த உலகின் முன்னிலையில் இந்தியாவின் முகம் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டாலும், சீக்கிய செயல்பாட்டாளர்கள் பலரும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவே அச்சத்துடன் உள்ளனர்” என்றார்.

இதையும் படிக்க: கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பதே அடுத்தகட்ட சரியான நடவடிக்கை: பிரிட்டன்

பஞ்சாப்புக்கு அடுத்தபடியாக சீக்கிய சமூகத்தினர் அதிகளவில் வசிக்கும் இடமாக கனடா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ‘நாடாளுமன்றக் குழு’ ஒன்று அமைக்கப்பட உள்ளதாக கனடா எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கனடா மட்டுமல்லாது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சீக்கிய பிரிவினைவாதி தலைவர் குர்பத்வாண்ட் சிங் பன்னனை கொல்வதற்கான சதியில் இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவருக்கு பங்கிருப்பதாக அமெரிக்க நீதித்துறை கடந்த வியாழக்கிழமை குற்றம்சுமத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024