ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுவதாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.

ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிப் போர்வைகள் எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்கப்படுகின்றன? இந்தக் கேள்வி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) ரயில்வே அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது.

இதற்கு கிடைத்த பதிலில், “லினென் போர்வைகள் ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்குப் பிறகும் துவைக்கப்படும். கம்பளிப் போர்வைகள் அதன் அளவுகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடுகளைப் பொறுத்து மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை துவைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தொலைதூர ரயில்களில் பணியாற்றும் பராமரிப்பு ஊழியர்கள் 20 பேரிடம் கேட்டபோது கம்பளிப் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுவதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர். மேலும் அவற்றில் கறை அல்லது துர்நாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவற்றை துவைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய ரயில்வே பயணிகளிடம் போர்வைகள், கம்பளிகள் மற்றும் தலையணை உறைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறதா என்ற ஆர்டிஐ கேள்விக்கு, “இவை அனைத்தும் ரயில் கட்டணத்தில் ஒரு பகுதியாகும். மேலும், கரீப் ராத் மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ​​படுக்கை விரிப்பு (தலையணை, போர்வை போன்றவை) விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஒவ்வொரு கிட்டுக்கும் கூடுதல் தொகை செலுத்துவதன் மூலம் அதனைப் பெறலாம்” என ரயில்வே பதிலளித்துள்ளது.

இதையும் படிக்க | கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு தண்டவாள நட்டுகள் கழற்றப்பட்டதே காரணம்!

துரந்தோ போன்ற பல்வேறு ரயில்களின் பராமரிப்பு பணியாளர்கள் ரயில்வே துறையின் சலவைப் பணி குறித்த மோசமான உண்மைகளைத் தெரிவித்தனர். ரயில்வே அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பராமரிப்பு மேலாண்மை (என்ஹெச்எம்) பிரிவு அதிகாரி ரிஷு குப்தா இதற்கான பதில்களைத் தாக்கல் செய்துள்ளார்.

”ஒவ்வொரு டிரிப் முடிந்தவுடன் போர்வைகள் மற்றும் தலையணை உறைகளை மூட்டைகளாகக் கட்டி சலவைக்குக் கொடுத்துவிடுவோம். கம்பளிகள் என்றால் அவற்றை நன்றாக மடித்து அந்தந்த ரயில் பெட்டிகளில் வைத்துவிடுவோம். அவற்றில் ஏதேனும் துர்நாற்றமோ, உணவுக் கொட்டப்பட்ட கறைகள் இருந்தால் மட்டுமே அவற்றை சலவைக்குக் கொடுப்போம்” என்று ஒரு பணியாளர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளாக பல்வேறு ரயில்களில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் பேசுகையில், “கம்பளிப் போர்வைகள் துவைப்பது குறித்து யாரும் கண்காணிப்பதில்லை. அவை, மாதம் இருமுறை துவைக்கபடுகிறதா என்பது குறித்தும் எந்த உத்தரவாதமும் இல்லை. பெரும்பாலும் போர்வைகளில் நாற்றம், ஈரம், வாந்தி போன்று ஏதேனும் இருந்தால் மட்டுமே அவற்றை சலவைக்கு அனுப்புவோம். மேலும், பயணிகள் சுத்தமில்லாத போர்வைகள் குறித்து புகாரளித்தால் அவர்களுக்கு வேறு ஒன்றை வழங்குவோம்” என்று கூறினார்.

இதையும் படிக்க | ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!

என்ஹெச்எம்ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவர், ரயில்வே துறை கம்பளி போர்வைகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், “கம்பளி போர்வைகள் கனமானவை, அவை சரியாக சலவை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வது கடினம். ரயில்வே இந்த போர்வைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இது”என்று அவர் கூறினார்.

ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின்படி, இந்திய ரயில்வே துறைக்கு 46 துறை சார்ந்த சலவை அமைப்புகளும், பூட் எனப்படும் 25 தனி சலவை அமைப்புகளும் உள்ளன.

”துறை சார்ந்த சலவை அமைப்பில் நிலம் மற்றும் சலவை இயந்திரங்கள் ரயில்வே துறைக்கு சொந்தமானதாகும். ஆனால், அங்குள்ள பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வார்கள்.

இதையும் படிக்க | கவரப்பேட்டை ரயில் விபத்து: மேலும் ஒரு பிரிவில் வழக்கு!

பூட் சலவை அமைப்புகள் தனியாருக்கு சொந்தமானவை. இதில், நிலம் மட்டும் ரயில்வே சார்பில் வழங்கப்படும். இதில் சலவை இயந்திரங்கள் தனியார் அல்லது ஒப்பந்ததாரருக்கு சொந்தமானதாக இருக்கும். பணியாளர்களும் அவர்கள் மூலமாகவே பணியமர்த்தப்படுவார்கள்” என்று மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024