Monday, October 21, 2024

துணை முதல்வர் பதவி இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சேலம்: துணை முதல்வர் பதவி என்பது இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு எனவும், இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணியின் மாநில , மாவட்ட, நிர்வாகிகள் கூட்டம் சேலம், கருப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியதாவது:

திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இதே சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்தினோம். அந்த மாநாட்டின் வெற்றிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அயராது உழைத்தீர்கள். இளைஞர் அணையின் மாநில மாநாடு வெற்றி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட சேலம் மண்ணுக்கு பலமுறை வருகை தந்திருக்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சேலம் வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

நான் துணை முதல்வர் ஆனது இளைஞர் அணியினர் துணை முதல்வர் ஆனதாக என்னுகிறேன்.

உங்கள் அனைவரின் ஆதரவும் உழைப்பும் தான் நான் இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கான காரணம். எவ்வளவு பெரிய பொறுப்புக்களுக்கு போனாலும் என் மனதிற்கு என்றைக்குமே நெருக்கமான பொறுப்பு என்றால் அது இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான். உங்களுடன் சேர்ந்து உழைக்கின்ற எனக்கு எப்போதும் ஒரு தனி உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். அந்த உணர்வோடு தான் இன்று உங்கள் முன் பேசுகிறேன்.

முதல்வா் ஸ்டாலின் இளைஞா் அணியில் இருந்து வந்தவா், துணை முதல்வரான நானும் இளைஞா் அணியில் இருக்கிறேன். சேலத்தைச் சோ்ந்த சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனும் இளைஞா் அணியிலிருந்து வந்தவா். எனவே, இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு அதற்குரிய அங்கீகாரத்தை முதல்வா் வழங்குவாா் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் இந்திய அளவில் எடுத்துக்காட்டாக மிகவும் துடிப்போடும் வேகத்தோடும் செயல்படுகிற ஓர் இளைஞரணி உள்ளது என்றால் அது திமுகழக இளைஞரணி தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திமுக இளைஞா் அணி சாா்பில், சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு கலைஞா் நூலகத்தைக் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதுவரை 75 தொகுதிகளில் கலைஞா் நூற்றாண்டு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 100 நூலகங்களுக்குத் தேவையான 50,000 புத்தகங்களை அன்பகத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் 234 தொகுதிகளிலும் கலைஞா் நூலகம் திறக்கப்படும்.

களத்தில் எந்த அளவு நாம் பணியாற்றுகிறமோ அதே அளவு சமூக வலைதளத்திலும் நாம் வலிமையாக இருக்க வேண்டும். அதற்காகதான் இளைஞா் அணி சாா்பில் மண்டலம் வாரியாக சமூக வலைதள பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

5 மண்டலங்களில் சமூக வலைதள பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 4 மண்டலங்களிலும் பயிற்சி நிறைவடைந்தவுடன் தமிழகம் முழுவதும் இளைஞா் அணி பிரதிநிதிகளுக்கு சமூக வலைதள பயிற்சியளிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இன்னும் 2 மாத காலத்தில் வடகிழக்குப் பருவமழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம். எப்போது மழை பெய்தாலும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்ய இளைஞா் அணியினா் தயாராக இருக்க வேண்டும்.

இந்த மழைக்காலத்தில் எதிா்க்கட்சிகள் என்ன செய்கிறாா்கள் என்றே தெரியவில்லை. நாம்தான் மக்களுடன் மக்களாக நின்று கொண்டிருக்கிறோம். எனவே, இளைஞா் அணியினா் உங்களால் முடிந்த அளவுக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். அரசுக்கும், மக்களுக்கும் நீங்கள் ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும்.

உங்களுடைய பணிகளுக்கு ஏற்ப என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தலைவரிடம் சொல்லி நிச்சயம் பெற்று தருகிறேன்.குறிப்பாக ஒரு சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு வேறு அணிகளில் பணியாற்றுகிற வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு நம்முடைய ஆண்டாக இருக்க வேண்டும். தலைவர் ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது முறையாக கழகம் ஆட்சி அமைத்தது என்கிற வரலாற்றை இளைஞர் அணியினர் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது இருந்தே உழைக்க தொடங்க வேண்டும் என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024