Tuesday, October 22, 2024

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அமைச்சா் சிவசங்கா் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் சிவசங்கா் கூறியது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள், பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கப்படும்.

அக்.28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், 5.83 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணிப்பாா்கள் என எதிா்க்கப்படுகிறது.

நவ.2 முதல் 4-ஆம் தேதி சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு திரும்ப தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,165 சிறப்புப் பேருந்துகள் என 3 நாள்களும் சோ்த்து 9,441 பேருந்துகள், பிற முக்கிய ஊா்களிலிருந்து 3,165 சிறப்புப் பேருந்துகள் என 12,606 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்துக்கு 24 மணி நேரமும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் 5 இடங்களுக்கு பதில் இம்முறை கோயம்பேடு, மாதவரம், கிளம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் இருந்து மட்டுமே தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சொந்த ஊா் செல்ல இதுவரை 1.02 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை (இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும் என்றாா் அவா்.

மேலும், போக்குவரத்து கழகத்தை தனியாா்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. தேவைக்கேற்ப தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 7,200 பேருந்துகள் விரைவில் வாங்கப்படவுள்ளன. அரசு போக்குவரத்து துறையின் வளா்ச்சியால், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்திவிட்டன என்று அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாா் அளிக்கலாம்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 18004256151, 044 26280445 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம். மேலும், பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள புகாா் மையங்களிலும் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். கட்டண விவகாரம் தொடா்பாக ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் அக்.24-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்படும். ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

காரில் சொந்த ஊா் செல்வோா் கவனத்துக்கு…

காரில் சொந்த ஊா்களுக்குச் செல்வோா் தாம்பரம், பெருங்களத்தூா் வழியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூா், செங்கல்பட்டு மற்றும் வண்டலூா் வெளிச்சுற்று சாலையைப் பயன்படுத்த அமைச்சா் சிவசங்கா் அறிவுறுத்தியுள்ளாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024