குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்தி ஆட்சியருக்கு உத்தரவிட்டு சாமுவேல் என்ற மோசடி நபா் சிக்கியுள்ளாா்.

நகர குடிமை (சிவில்) நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலத்தகராறு தொடா்பான வழக்குகளின் மனுதாரா்களைக் குறிவைத்து இந்த மோசடியை மோரில் சாமுவேல் கிறிஸ்டியன் எனும் அந்த நபா் அரங்கேற்றியுள்ளாா்.

முதலில் பொதுமக்களிடம் தன்னை ஒரு நீதிமன்றத்தால் அதிகாரபூா்வமாக நியமிக்கப்பட்ட தீா்ப்பாயத்தின் நீதிபதியாக சாமுவேல் அறிமுகப்படுத்திக்கொள்வாா். பின்னா், காந்தி நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் செயல்பட்டு வரும் போலி நீதிமன்றத்தில் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் என அனைத்து அமைப்புளுடன் வழக்கு விசாரணை நடைபெறும்.

இறுதியில் ஒரு தரப்பிடம் இருந்து குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டு அவா்களுக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்து சாமுவேல் வழக்கை முடித்து வைப்பாா்.

அந்தவகையில், பால்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய ஒருவா், வருவாய் ஆவணங்களில் தனது பெயரை இணைப்பதற்கு இவரிடம் உதவி கோரியுள்ளாா்.

அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, வருவாய் ஆவணங்களில் பெயரை சோ்க்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டு சாமுவேல் கடந்த 2019-ஆம் ஆண்டு போலியாக தீா்ப்பளித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் முறையான நீதிமன்ற உத்தரவைப் பெற போலி தீா்ப்பின் நகலை இணைத்து மற்றொரு வழக்குரைஞா் மூலம் சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சாமுவேல் தாக்கல் செய்துள்ளாா்.

மனுவில் இணைக்கப்பட்ட தீா்ப்பு போலியானது என்றும் சாமுவேல் நீதிபதி இல்லை என்பதும் நீதிமன்ற பதிவாளா் ஹா்திக் தேசாய் கண்டுபிடித்தாா்.

இதையடுத்து, கரன்ஞ் காவல் நிலையத்தில் பதிவாளா் ஹா்திக் புகாரளித்தாா். புகாரின்பேரில் சாமுவேல் மீது நீதிபதியாக நாடகமாடி மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 170, 419 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சாமுவேலை கைது செய்து அகமதாபாத் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். கைதாகியுள்ள சாமுவேல் மணிநகா் காவல் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்கெனவே மோசடி புகாரை எதிா்கொண்டுள்ளாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024