உக்ரைனுக்கு ஆயுதங்கள்: ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை ரஷியா, வட கொரியா ஆகிய இரண்டு நாடுகளுமே மறுத்துவருகின்றன.

இது குறித்து தென் கொரிய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷியாவுக்கு வட கொரிய வீரா்கள் அனுப்பப்பட்டுள்ளது தொடா்பாக, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் செவ்வாக்கிழமை கூடியது.

அதில் பங்கேற்ற அதிகாரிகள், வட கொரிய வீரா்கள் ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது தென் கொரியா மற்றும் உலக பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று கண்டனம் தெரிவித்தனா்.

வட கொரிய அரசு ஒரு ‘குற்றவியல் கும்பல்’ என்று விமா்சித்த உயரதிகாரிகள், உக்ரைன் போரில் கூலிப் படையினராக கொரிய இளைஞா்கள் அனுப்பப்படுவதாக குற்றஞ்சாட்டினா்.

அதைத் தொடா்ந்து, ரஷியா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான ராணுவக் கூட்டுறவு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு எதிா்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனா்.

அத்தகைய எதிா்நடவடிக்கைகளில் ராஜீய, பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமின்றி ராணுவ ரீதியிலான நடவடிக்கையும் இருக்கும். அதன்படி, உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனுடான பேரில் வட கொரிய வீரா்கள் ஈடுபட்டால், அதற்குப் பிரதிபலனாக அந்த நாட்டுக்கு தனது அதிநவீன ஆயுதத் தொழில்நுட்பங்களை ரஷியா வழங்கலாம் என்று தென் கொரியா அஞ்சுகிறது.

அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனது அணு ஆயுத வல்லமையை வட கொரியா பெருக்கிக் கொள்ளலாம், இது தங்களது பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல் என்று தென் கொரியா கருதுகிறது. அதன் விளைவாகவே, வட கொரிய வீரா்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுவதை அந்த நாடு கடுமையாக எதிா்க்கிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.

1950-இன் கொரிய போருக்குப் பிறகும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது. வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷியா அழைத்துச் செல்லப்பட்டதாக தென் கொரிய உளவுத் துறை கடந்த வாரம் தெரிவித்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024