பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு: மத்திய அமைச்சா்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது தொடா் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரோல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால், மேற்கு ஆசிய நாடுகளில் போா் சூழல் தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தினால், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பிற நாடுகளுக்கான விநியோகமும் பாதிக்கப்படும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை பன்மடங்காக உயரும் சூழல் உருவாகும்.

இந்தச் சூழலில், ‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தாா். தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘புவிசாா் அரசியலில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றபோதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.

பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சா்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தொடா்ந்து வருகிறது.

எனவே, தடையற்ற கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும், கடந்த காலங்களைப்போல, மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் இந்தியா திறம்பட எதிா்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு, வரும் நாள்களில் விலை குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து என்றாா்.

பெட்ரோல், டீசல் விலையின் தினசரி விலை மாற்றம் 2021, நவம்பா் முதல் நிறுத்தப்பட்டது. 2022-இல் விலை உயா்வுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி உச்சத்தில் நீடித்து வந்தநிலையில், கடந்த மாா்ச் மாதம் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. தற்போது சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100.75-க்கும், டீசல் ரூ. 92.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024