தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

இலங்கை மன்னராக பட்டம் சூட்டிக்கொண்ட பிறகு ராமபிரானை விபீஷணர் சுற்றி வந்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

2-வது நாளான நேற்று தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நேற்று காலை 7 மணியளவில் கோவிலில் இருந்து ராமபிரான் தங்க கேடயத்திலும், விபீஷணரும் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து பகல் 1 மணி அளவில் கோதண்ட ராமர் கோவிலில் வைத்து ராமபிரான், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தங்க கேடயத்தில் எழுந்தருளிய ராமபிரான், இலங்கை மன்னராக ராவணனின் தம்பி விபீஷணருக்கு பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் இலங்கை மன்னராக பட்டம் சூட்டிக்கொண்ட விபீஷணர் ராமபிரானை சுற்றி வலம் வந்தார்.

தொடர்ந்து ராமபிரான் மற்றும் விஷ்ணுவுக்கும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றன. பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் சிவராம் குமார், பேஷ்கார் கமலநாதன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பட்டாபிஷேக பூஜைகளை உதயகுமார் மற்றும் ஸ்ரீராம் குருக்கள் ஆகியோர் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 12.30 மணியளவில் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவும் நடைபெறுகின்றது. இரவு சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி ரத வீதிகளின் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

You may also like

© RajTamil Network – 2024