பிரியங்கா காந்திக்கு ரூ.12 கோடி சொத்து – வேட்புமனுவில் தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வயநாடு தொகுதியில் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம்,

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளா மாநிலம் வயநாடு மற்றும் அவரது தாய் சோனியா காந்தி எம்.பி.,யாக இருந்த உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

இதையடுத்து வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போது ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி.யாக இருக்கிறார். இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தலோடு வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவை இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்தது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று பிரியங்கா காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வயநாட்டில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக கட்சி தொண்டர்களுடன் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பிரியங்கா காந்தியுடன் தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். இந்நிலையில் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரியங்கா காந்தியின் கையில் ரூ.52 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளது. 30.09.2024ம் தேதியின் படி பிரியங்கா காந்தியின் டெல்லி எச்டிஎப்சி வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம் பணம் உள்ளது. டெல்லி யுசிஓ வங்கியில் ரூ.80,399 ரொக்கப்பபணம் இருக்கிறது. அதேபோல் கேரளா கனரா வங்கியில் ரூ.5,929 சேமிப்பாக இருக்கிறது.

மியூச்சுவல் பண்ட் முறையில் ரூ.2.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சொந்தமாக ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த காரை அவரது கணவர் ராபர்ட் வதேரா 2004ல் பரிசளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8 லட்சமாகும். ரூ.1.15 கோடி மதிப்புக்கு தங்க நகை ஆபரணங்கள் உள்ளன. இதுதவிர ரூ.29.55 லட்சம் மதிப்பிலான 59.83 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது.

மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 689க்கு அசையும் சொத்து உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் மொத்தம் ரூ.37.91 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. அதேபோல் அசையா சொத்துகளை எடுத்து கொண்டால் பிரியங்கா காந்தியிடம் ரூ.7 கோடியே 74 லட்சம் உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.27 கோடியே 64 லட்சத்துக்கு அசையா சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக பார்த்தால் பிரியங்கா காந்தியிடம் அசையும் + அசையா சொத்துகள் என்று மொத்தம் சுமார் ரூ.12 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.65.55 கோடிக்கு சொத்துகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024