சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! எல்லை பிரச்னைக்குத் தீர்வு?

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

லடாக் எல்லை விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்ய இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா – சீனா இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் ரோந்து செல்ல சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வேறுபாடுகள் அமைதியை சீர்குலைக்கக் கூடாது

ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தொடர்பான விஷயங்களில் உள்ள வேறுபாடுகளால், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள அமைதி சீர்குலைய அனுமதிக்கக் கூடாது என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

இந்தியா – சீனா எல்லை பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும், எல்லையில் அமைதியைப் பேணுவதிலும் இருநாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

அவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் சிறப்பு பிரதிநிதிகளுக்கான பேச்சுவார்த்தைக் கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்யவும் ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சிறப்புப் பிரதிநிதிகளின் அடுத்த கூட்டத்தை உரிய தேதியில் திட்டமிடுவோம் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார்.

இந்திய மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கடந்த பல வாரங்களாக, ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டிலிருந்து லடாக் எல்லைப் பகுதிகளில் பிரச்னைகள் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண பலதரப்பட்ட் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

இதனிடையே இருதரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாக, எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கும், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகள் வழியாக ரோந்து செல்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த திங்கள் கிழமை (அக். 21) தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024