உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை! சமாஜவாதிக்கு ஆதரவு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை இரவு அறிவித்துள்ளார்.

காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி சமாஜவாதிக்கு முழு ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

9 தொகுதிகளுக்கு தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மில்கிபூர் சட்டப்பேரவை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சமாஜவாஜி மற்றும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றன.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றினாலும் சமாஜவாதி 37 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வென்றது.

கூட்டணியின் சலசலப்பு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகள் கேட்ட நிலையில், காசியாபாத் மற்றும் கைர் தொகுதிகளை மட்டுமே கொடுப்பதற்கு சமாஜவாதி முன்வந்தது.

மேலும், சமாஜவாதி போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே – விரிசல் அல்ல!

இதனிடையே, கடந்த வாரம் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அகிலேஷ் யாதவுடன் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்கு பதிலாக, இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

‘புதிய அத்தியாயத்தை எழுதுவோம்’

காங்கிரஸ் போட்டியிடுமா என்ற கேள்விக்கு சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பதிவின் மூலம் புதன்கிழமை இரவு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“தொகுதிகளை கருத்தில் கொள்ளாமல், வெற்றியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட வியூகத்தில், சமாஜவாதி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்தில் அனைத்து 9 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

காங்கிரஸும் சமாஜவாதியும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வெற்றிக்காக தோளோடு தோள் நிற்கின்றன. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் பூத் கமிட்டி தொண்டர்களின் ஆதரவால் சமாஜவாதியின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம் 9 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் சாசனத்தையும், நல்லிணக்கத்தையும் காப்பாற்றும் தேர்தல் இது. அதனால், ஒரு வாக்குகூட குறையாமல், பிரிக்கப்படாமல் இருக்க அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்.

நாட்டின் நலனில் நல்லிணக்கம் கொண்ட 'இந்தியா’ கூட்டணியின் இந்த ஒற்றுமை, இன்றும் நாளையும் புதிய வரலாற்றை எழுதும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கூட்டணிக் கொள்கையை கடைப்பிடித்து எந்த தொகுதியிலும் போட்டியிடாமல், சமாஜவாதி ஆதரவை அளிக்க உறுதி அளிப்பதாக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024