மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம்: ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஈரானின் ராணுவ இலக்குகள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

டெல் அவிவ்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர். அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த கிளர்ச்சி குழுக்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் மீது கடந்த ஏப்ரல் மாதம் 170 டிரோன்கள், 150 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. அதேபோல், கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த 2 தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதேவேளை, ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரானிம் ராணுவ இலக்குகள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக தங்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ம் தேதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.

எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால், பதிலுக்கு ஈரான் ராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மீண்டும் மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

In response to months of continuous attacks from the regime in Iran against the State of Israel—right now the Israel Defense Forces is conducting precise strikes on military targets in Iran.
The regime in Iran and its proxies in the region have been relentlessly attacking… pic.twitter.com/OcHUy7nQvN

— Israel Defense Forces (@IDF) October 25, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024