ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழில் வெற்றி பெற்ற நகைச்சுவை பாணி இயக்குநராக வலம் வந்தவர்.
இவரது படங்களில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவு கவனம் பெற்றவை. இன்றுவரை, இவரது ‘நண்பண்டா’ வசனம் நண்பர்களுக்கு இடையேயான பேச்சுகளில் இடம்பெறத் தவறுவதில்லை. தற்போது, நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி டீசர் எப்போது?
இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின், ‘மக்காமிஷி’ பாடல் மிகவும் புகழ்பெற்றது. தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி பிரதர் வெளியாகிறது. படத்திற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் செவன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கோல்ட்மைன்ஸ் டெலி ஃபிலிம்ஸ் இடையேயான நிதி பிரச்னை முடிவடையாததால் பிரதர் வெளியீட்டில் சிக்கல் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.