தில்லி, மேற்கு வங்க அரசுகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேராததால், இவ்விரண்டு மாநிலங்களின் மக்களுக்கு உதவ இயலாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி ஜன ஆரோக்ய யோஜனா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தெரிவித்ததாவது “மருத்துவ சிகிச்சைக்காக மக்களின் வீடுகள், நிலங்கள், நகைகள் ஆகியவற்றை விற்ற ஒரு காலம் இருந்தது. எனது ஏழை சகோதர, சகோதரிகள் இவ்வாறான உதவியற்ற நிலையில் இருப்பதை என்னால் தாங்க இயலவில்லை. அதனால்தான், ஆயுஷ்மான் பாரத் திட்டம் உருவானது.
இந்தத் திட்டத்தின் மூலம், நாட்டில் சுமார் 4 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதம மந்திரி ஜன ஆரோக்ய யோஜனா திட்டத்தின்கீழ், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள். ஆனால், தில்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்ய முடியாததற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்; ஆனால், என்னால் உங்களுக்கு உதவ முடியாது. ஏனெனில் தில்லி, மேற்கு வங்கத்தின் அரசுகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேரவில்லை.
நான் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும்; ஆனால், இவ்விரண்டு அரசுகளின் சுவர்கள் தில்லி மற்றும் மேற்கு வங்கத்தின் முதியவர்களுக்கு சேவை செய்வதிலிருந்து என்னைத் தடுக்கின்றன.
அரசியல் நலன்களுக்காக நோய்வாய்ப்பட்ட மக்களை ஒடுக்கும் போக்கு மனிதாபிமானமற்றது’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:விமான நிலையங்கள், விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!