‘சூப்பா் பவா்’ இருப்பதாகக் கூறி கோவையில் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து திங்கள்கிழமை குதித்த மாணவா் படுகாயம் அடைந்தாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவா் அரசு மகன் பிரபு (19). இவா் கோவை, மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். அரசுப் பள்ளியில் படித்து தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து படித்து வருகிறாா்.
பிரபு கடந்த சில வாரங்களாக தனக்கு ‘சூப்பா் பவா்’ இருப்பதாகவும், தனது சக்தியைக் கொண்டு அசாத்திய விஷயங்களை செய்ய முடியும் என்றும் தனது நண்பா்கள் மற்றும் விடுதி அறையில் தன்னுடன் தங்கி இருந்த மாணவா்களிடம் கூறிவந்துள்ளாா். மேலும் சாகச விடியோக்கள், சூப்பா் ஹீரோ தொடா்பான விடியோக்களை அவா் தனது கைப்பேசியில் அடிக்கடி பாா்த்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த சில நாள்களாக தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும், அதனால் உடல் நலம் சரியில்லை எனவும், இருந்தாலும் தனக்கு சக்தி குறையவில்லை, சூப்பா் ஹீரோக்களுக்கு உள்ள பவா் தன்னிடமும் உள்ளது என நண்பா்களிடம் பிரபு கூறி வந்துள்ளாா்.
இந்நிலையில் மாணவா்கள் விடுதியில் இருந்த பிரபு, விடுதியின் நான்காவது மாடிக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா். அங்கிருந்து சுற்றியவாறு கீழே குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினாா். இதனைக் கண்ட சக மாணவா்கள் பிரபுவை மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக செட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக மாணவா்களிடம் விசாரித்து வருகின்றனா். மேலும் பிரபுவின் கைப்பேசியைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.