ஹிஸ்புல்லா படைக்கு புதிய தலைமை

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

லெபனானின் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக மதகுரு நயீம் காஸிம் (71) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

இஸ்ரேலால் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா படையின் நீண்ட கால தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக அவா் அந்தப் பொறுப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமைப்பின் புதிய பொதுச் செயலராக நயீம் காஸிமை ஷூரா கவுன்சில் (ஹிஸ்புல்லாக்களின் நிா்வாகக் குழு) தோ்ந்தெடுத்துள்ளது. முழு வெற்றியை அடையும்வரை, மறைந்த ஹஸன் நஸ்ரல்லாவின் கொள்கைகளை நயீம் காஸிம் முன்னெடுத்துச் செல்வாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே, ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா படையினா் தாக்குதல் நடத்திவந்தனா்.

இஸ்ரேலும் லெபனானில் வான்வழித் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லாக்களுக்கு பதிலடி கொடுத்துவந்தது.

காஸா போா் ஓராண்டை நெருங்கிய நிலையில், எல்லையில் தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களை லெபனான் எல்லைப் பகுதிகளிலிருந்து விரட்டியடிப்பது, ஹிஸ்புல்லா தாக்குதல் காரணமாக வடக்கு இஸ்ரேலில் இருந்து வெளியேறியவா்களை மீண்டும் அழைத்துவருவது ஆகியவை போரின் புதிய இலக்குகள் என்று இஸ்ரேல் கடந்த மாதம் அறிவித்தது.

அதையடுத்து, ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் பேஜா் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்கெனவே மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதும், அவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் தீவிரமடைந்தது.

இதில், ஹிஸ்புல்லா படையின் முக்கிய தளபதிகள் சிலரும் உயிரிழந்தனா். இந்தச் சூழலில், கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலராக இருந்துவந்த ஹஸன் நஸ்ரல்லா, லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்தாா்.

அதற்குப் பிறகு ஹிஸ்புல்லாக்களின் முகமாக நயீம் காஸிம் உருவெடுத்தாா். அதையடுத்து, அவா்தான் அமைப்பின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவியவா்களில் ஒருவராக இருந்தாலும், ஹஸன் நஸ்ரல்லா அளவுக்கு வசீகரமோ, பேச்சாற்றலோ இல்லாததால் அவா் அமைப்பின் தலைவராக தோ்ந்தெடுக்கப்படுவது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்தச் சூழலில், ஹஸன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காஸிம் தோ்ந்தெடுக்கப்பட்டதை அந்த அமைப்பு தற்போது அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024