விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இதற்காகபசும்பொன் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவினையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தேவரின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றக்கூடிய செயல்களையும் திட்டங்களையும் கொண்டு வந்துள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆன்மீகமும், அரசியலும் கலக்க முடியாது என்று உதயநிதி சொல்கிறார். ஆனால் ஆன்மீகம், அரசியலை சரியாக கொண்டு சென்றதால்தான் தேவருக்கு வெற்றி கிடைத்தது. இந்த காலகட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும்
இன்று உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் உலக அரங்கில், விளையாட்டை முன்னிறுத்துவதற்கு அஜித்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இங்கே சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டு திடல்களில் 10 பேர் பயிற்சி பெற்றால், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 கட்ட வேண்டும் என மிக கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது.
இது சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டு திடல்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மாநகராட்சி திடலுக்கு கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மாநகராட்சி உடனே திரும்ப பெற வேண்டும். போதையில் இருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு விளையாட்டு தேவை" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.