ஒப்பற்ற தலைவராகப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திகழ்வதால் தான் புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் கூட அவரது பெயரை உச்சரிப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, வாலாஜாபாத் கணேசன், ராயபுரம் ஆர்.மனோ, மாவட்ட கழக செயலாளர்கள் விருகம்பாக்கம் ரவி மற்றும் எம்.கே.அசோக், சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மாணவரணி மாநிலச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் தான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் ஜெயந்தி விழாவாக அறிவிக்கப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் நிகழ்வு நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விளையாட்டு திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது, விளையாட்டுத் துறைக்கு ஒரு சாபக்கேடு எனக் குற்றம் சாட்டினார்.
நிதி வருவாய் குறைவாக உள்ளது என்ற காரணத்தைக் காண்பித்து, மாநகராட்சி விளையாட்டு திடல்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல என்று கூறிய அவர், கார் பந்தயம் நடத்துவதற்கும், அவரது தந்தைக்கு பேனா சிலை வைப்பதற்கும் நிதி இருக்கும்பொழுது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து விளையாட்டுத் துறையை மேம்படுத்த நிதி இல்லையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான் என்றும், மத்திய அரசின் நடவடிக்கையைப் போன்றுதான் திமுக அரசின் செயல்பாடும் இருக்கிறது.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள், பத்திரிக்கை துறையினரை சிறையில் அடைப்பது எனப் பல்வேறு வகைகளில் திமுக அரசு பாசிச முறையைக் கையிலெடுத்துள்ளது. எனவே அதில் எந்த தவறும் இல்லை என்று விமர்சித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியை மத்திய அரசைக் காரணம் காட்டி தமிழக அரசு வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது என்றும், நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்காமல் இருப்பதால் தமிழக முழுவதும் மீனவர்கள் மிகுந்த மன வேதனையோடு இருப்பதாகவும், மத்திய அரசை எதிர்பாராமல் விரைவில் அவர்களுக்கான நிதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.