தீபாவளியையொட்டி தில்லியிலுள்ள மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு பதிலாக வீட்டில் விளக்குகளை ஏற்றுவதன் மூலம் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் தீபாவளியைக் கொண்டாடலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அரவிந்த் கேஜரிவால் தெரிவித்ததாவது, பட்டாசு வெடிக்கும் பிரச்னை என்பது முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் மற்றும் தில்லி மக்களில் நலன் சார்ந்தது. இது ஹிந்து முஸ்லிம் சார்ந்த விஷயமல்ல. தில்லியில் காற்று மாசை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி என்பது ஒளியின் திருவிழா. இதனை வீடுகளில் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் ஏற்றிக் கொண்டாடலாம். பட்டாசுகள் வெடித்து அல்ல.
தூய்மைப் பணியாளர்கள், 18 ஆண்டுகளில் முதல்முறையாக மாத இறுதிக்கு முன்னரே ஊதியம் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு 7 முதல் 8 மாதங்களாகிவிடும். இம்முறை தீபாவளியையொட்டி ஊதியத்தையும், தீபாவளி போனஸையும் இம்மாதத்திலேயே பெறுவதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதனால், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும் எனக் குறிப்பிட்டார்.
தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிப்பதால், அதிக அளவிலான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க | தீபாவளி.. கடைசி நேர ஷாப்பிங்கை மந்தமாக்கிய மழை!