உலகளவில் புதுமையிலும் தொழில்நுட்பத்திலும் இந்திய இளையோருக்கு ஈடு இணையில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மென்பொருள் துறையைச் சார்ந்த எண்ணிலடங்கா பணியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத் தளமாக ‘கிட் ஹப்’ விளங்குகிறது. இந்த நிலையில், கிட் ஹப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான தாமஸ் டாம்கே, மென்பொருள் துறையில் இந்தியர்கள் அளித்துவரும் மகத்தான பங்களிப்பை அண்மையில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மென்பொருள் தொழில்நுட்பத் துறையில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளதாக தாமஸ் டாம்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகளவில் தொழில்நுட்பத்தில் வல்லமை பொருந்தியதொரு தேசமாக இந்தியா எழுச்சியடைவதை தடுக்க இயலாது எனவும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதனை மேற்கோள்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 30) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “புதுமையிலும் தொழில்நுட்பத்திலும் இந்திய இளையோர் மிகச் சிறந்தவர்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.