ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நிறைவுநாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதல் தெவெக தலைவர் விஜய் வரை அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு இன்று(அக்.30) மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 30) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பெரும் மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். அவருடைய கருத்துகள் மற்றும் போதனைகளிலிருந்து, எண்ணிலடங்கா மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.
வறுமை ஒழிப்பு, ஆன்மிகம் மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நம் சமூகம் சிறக்க அவர் தன்னைத்தானே அர்ப்பணித்துள்ளார். அவருடைய கனவு நிறைவேற நாம் தொடர்ந்து உழைப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.