சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்திய இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
புணேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 30 ரன்களும், இரண்டாம் இன்னிங்சில் 77 ரன்களும் அடித்து, இந்திய அணி ரன் திரட்ட மகத்தான பங்களிப்பை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மென்கள் தரவரிசையில் சரிவைக் கண்டுள்ளார். அவர் 6 இடங்கள் பின்தங்கி 14-ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பியுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட், 5 இடங்கள் பின்தங்கி 11-ஆவது இடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில், ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.