பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் இபிஎஸ் மரியாதை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் இபிஎஸ் மரியாதை

பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவை ஒட்டி பசும்பொன்னில் தேவரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் தான், தேவர் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. மேலும், பல சிறப்புமிக்க திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றினோம். சுதந்திரப் போராட்டத்தில், ஈடுபட்ட காலத்தில் மேடைகளில் மிகசிறப்பாக சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லமை படைத்தவர். இதனால், அவரது மேடைப்பேச்சுகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலேயே அரசு வாய்பூட்டுச் சட்டம் போட்டது.

வீரம், விவேகம், தன்னடக்கம், எளிமை போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக தேவர் திகழ்ந்தார். பெரும்பான்மையான கிராமங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும்கூட, தன்னுடைய நிலங்களை பட்டியலினத்தவர் உள்ளிட்ட ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் அவர்.

1952-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர் தேவர். தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தியிருக்கிறோம். இந்த இடம் ஒரு புனிதமான இடம். இந்த இடத்தில் அரசியல் பேசுவது சரியானதாக இருக்காது,” என்று அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024