தேவர் ஜெயந்திக்காக வரும் வாகனங்கள்: விருதுநகரில் போலீஸார் தீவிர சோதனை
விருதுநகர்: விருதுநகர் மற்றும் திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் இருந்து தேவர் குருபூஜைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் விருதுநகரில் இன்று (அக்.30) தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் ஏராளமானோர் செல்கின்றனர். அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு குருபூஜைக்குச் செல்லும் வாகனங்களுக்கு என தனியாக அனுமதி பாஸ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே குருபூஜைக்கு செல்ல வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதையொட்டி விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோடு – அருப்புக்கோட்டை சாலையில் போலீஸார் தற்காலிக சோதனை சாவடி அமைத்துள்ளனர். விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து பசும்பொன் செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீஸார் இங்கு நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பின்னரே அனுமதித்து வருகின்றனர். வாகனத்தின் எண், ஓட்டுநரின் பெயர், பொறுப்பாளர் பெயர் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை போலீஸார் பதிவு செய்து கொண்ட பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.