சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பறந்து குடோனுக்குள் விழுந்ததில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் கே எஸ் தியேட்டர் பின்புறம் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். தீபாவளி பண்டிகைக்கு பனியன் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், அப்பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி ஒன்று பனியன் நிறுவனத்துக்குள் விழுந்துள்ளது.
அதில் குடோனுக்குள் இருந்த பொருள்களில் தீப்பற்றியது. மளமளவென தீ பரவி குடோன் முழுவதும் எரிய தொடங்கியது.
இதனைப் பார்த்த அஅக்கம்பக்கத்தினர் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு அலுவலர் சிவகுமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தீ விபத்து குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.