சிவகாசி பட்டாசு ஆலைகள் மூலம் ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையானதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பட்டாசு தொழிலின் மையமாக சிவகாசி கருதப்படுகிறது. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 70 சதவீதம் இங்கிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
சிவகாசியில் ஏறத்தாழ 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் தயாரித்த ரூ. 6,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனையாகியுள்ளது.
பட்டாசு விற்பனைத் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள தகவலின்படி, பட்டாசு தயாரிப்பில் முக்கியப் பொருளான பேரியம் நைட்ரேட் மீது உச்ச நீதிமன்றம் தடை விதித்து, சரவெடி பட்டாசு தயாரிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்ததால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு 30 சதவீதம் வரையிலான உற்பத்தி குறைந்துள்ளது.
பட்டாசு உற்பத்தியாளர்களில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட ஆலைகளில் சரவெடிகள் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | தீபாவளி: தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம்!
இது தொடர்பாகப் பேசிய காளீஸ்வரி பட்டாசு ஆலை உரிமையாளர் ஏ.பி.செல்வராஜன், “சத்தமாக வெடிக்கும் வெடிகள் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம். அதில் 20 சதவீதம் சரவெடிகளே. அதனைத் தயாரிக்கும் பல உற்பத்தியாளர்கள் ஆலைகளை பல மாதங்களாக மூடி வைத்துள்ளனர். இதனால், அங்கு வேலை பார்த்த பல உற்பத்தியாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர்” என்று கூறினார்.
கூடுதலாக, கனமழை காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி வழக்கமான அளவில் இல்லாமல் 75 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பட்டாசு தயாரிப்பின்போது போது நடக்கும் பல விபத்துகளால், உயிர் இழப்புகள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் சிவகாசியில் 17 விபத்துகள் நிகழ்ந்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.