நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோதே இக்கதை, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் உயிர்நீத்த தமிழக மேஜர் முகுந்த் வரதராஜனுடையது என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, படக்குழுவும் அதை உறுதி செய்தது. சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் முகுந்த், அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். திறமையான மாணவராகத் தேர்வில் வென்று இராணுவத்தில் இணைகிறார்.
இதற்கிடையே, தன் கல்லூரி படிப்பின்போது இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவரைக் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொண்டு அழகான வாழ்க்கையை வாழக் கற்பனை செய்தாலும் ராணுவ வாழ்க்கை அதற்குத் தடையாக மாறுகிறது. காஷ்மீரில் 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைக்கு மேஜராகப் பொறுப்பேற்ற பின் முகுந்த் வரதராஜன் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? ராணுவ வீரரின் பார்வையில் நாடும், குடும்பமும் எப்படி இருக்கின்றன என்கிற கதையாக அமரன் உருவாகியிருக்கிறது.
”2013 ஜூன் மாதம் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அல்தாஃப் பாபா காஷ்மீரில் உள்ள யஷு குஜன் பகுதிக்கு வந்திருக்கும் தகவல் இந்திய ராணுவத்திற்குக் கிடைக்கிறது. மிக ரகசியமாக அப்பகுதிக்கு 44 ஆர்ஆர் குழு, மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமையில் செல்கிறது. ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெறுகிறது. எப்படியாவது அல்தாஃபை வீழ்த்த வேண்டும் என துப்பாக்கியின் விசையை அழுத்தும் தீவிரத்தில் முகுந்த் இருக்கிறார்.
ஆனால், அல்தாஃப் துப்பாக்கியிலிருந்து சரமாரியாக குண்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முகுந்த் அந்த ஆபத்தான சூழலிலும் தன் மனதை ஒருநிலைப்படுத்தி இன்னும் அல்தாஃபின் துப்பாக்கியிருந்து எத்தனை குண்டுகள் வெளிவரும் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு வருகிறார். ஒரு சில நொடிகள்…” மேலே சொன்னவை இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் (indian's most fearless) புத்தகத்தில் முகுந்த் வரதராஜனின் திறமையைக் குறிப்பிடும் சம்பவங்களில் ஒன்று. இந்த புத்தகமே அமரன் உருவாகக் காரணமாக இருந்ததை இயக்குநர் தெரிவித்திருக்கிறார். முகுந்த் எத்தனை தீவிரமான அர்பணிப்பு உணர்வுகொண்ட ராணுவ வீரர் என்பதை அப்புத்தகத்தின் துணையுடனும் அவருடன் பணியாற்றியவர்களின் நினைவுகளின் வழியாக முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மிக உயிர்ப்புடன் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் செயல்படும் முறை, பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் திறன் என மிக தத்ரூபமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் நம்பகத்தன்மைக்கு இக்காட்சிகள் பெரிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, அல்தாஃப் பாபாவை முகுந்த் நெருங்கும் இடைவேளைக் காட்சிகள் அட்டகாசமான ஒளிப்பதிவில் சிறப்பான ஆக்சன் காட்சியாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், சண்டைக்காட்சிகளுக்கு இணையாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஒருபுறம் நாட்டிற்கான போராட்டம் மறுபுறம் குடும்பத்தினருடனான உணர்ச்சிகள் என படத்தின் திரைக்கதை கவனமாக எழுதப்பட்டிருக்கிறது.
உண்மை சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்கும்போது கிளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும். ஆனால், அந்த அறிதலைத் தாண்டி ரசிகர்களின் மனநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதே இம்மாதிரியான கதைகளின் சவால். இந்த சவாலை அசத்தலான மேக்கிங்கில் திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக, ‘அச்சமில்லை, அச்சமில்லை’ பாடலைக் காட்சிகளுக்குள் வைத்த விதம் ரசிகர்களிடம் பெரிய கவனத்தைப் பெறலாம்.
இதையும் படிக்க: இந்திய – சீன எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாற்றம்!
நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்த ராணுவ வீரரின் தியாகத்தின் கதையாக மட்டுமில்லாமல் காதல் மனைவியின் மீதும் தன் குடும்பத்தினர் மீது முகுந்த் வரதராஜன் வைத்திருந்த நேசத்தையும் இணைத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரைப் பணயம் வைக்கும் ராணுவத்தினருக்கும் குடும்பம் இருக்கிறது; ஆனால், குடும்பத்தைவிட நாட்டின் நலனை முன்வைத்த தைரியமான ராணுவ வீரராக மேஜர் முகுந்த் வரதராஜன் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
சிவகார்த்திகேயன் பெரிதாக முன்னேறியிருக்கிறார். ஆக்ஷன் கதைகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்கிற விமர்சனத்தை அமரனிலிருந்து மாற்றி அமைத்திருக்கிறார். படத்தின் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிவரை ராணுவ வீரரின் குணத்தை தன் உடல்மொழியில் சுமந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தேவைக்கு அதிகமற்ற அதேநேரம் கச்சிதமான நடிப்பு. சிவகார்த்திகேயனின் நடிப்பிலிருந்து முகுந்த் வரதராஜனுக்கு புதிய பிம்பம் கிடைக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களின்போது முகுந்த் இப்படித்தான் இருந்திருப்பாரோ என தோன்றுகிறது.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகப் பொருத்தமான தேர்வாக மாறுபவர் நடிகை சாய் பல்லவி. அமரனில் மிக முக்கியமான ஆள் என்பதால், கூடுதல் கவனத்துடன் உண்மையான முகுந்த் வரதராஜனின் மனைவியான ரெபேக்கா இந்து வர்கீஸுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் தன் கணவன் ராணுவத்தில் இருப்பதைக் கண்டு கலங்கும் மனைவியாகவும் சாய் பல்லவி ஒரு பரிணாமத்தை நோக்கி நகர்வது சரியாக கதைக்குப் பொருந்திருக்கிறது. கிளைமேக்ஸில் தன் முகபாவனைகளில் பெரிய அமைதியை உருவாக்குகிறார்.
கர்னலாக நடித்த ராகுல் போஸ், விக்ரம் சிங்காக நடித்த புவன் அரோரா, உமைர் லதீஃப் ஆகியோர் சிறப்பான கதாபாத்திர தேர்வுகள். தங்களுக்குக் கிடைத்த காட்சிகளை நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் சிஎச். சாய் மற்றும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இருவரும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு ஜி.வி.யின் இசை பெரிதாகக் கைகொடுத்திருக்கிறது.
ஒரு படத்தின் ஆக்சன் காட்சிகளின் தரத்தை உயர்த்துவது சண்டைப் பயிற்சியாளர்களின் வேலை. அமரனில் அன்பறிவ் சகோதரர்கள் பிரமாதமாக பணிபுரிந்திருக்கின்றனர். ராணுவம் சார்ந்த திரைப்படங்களுக்கு முன்மாதிரியான படமாக இருக்கக்கூடிய அளவிற்கு அமரன் சண்டைக்காட்சிகளும் அதற்கான உணர்ச்சிகளும் சரியாக உள்ளன. இடைவேளை சண்டைக்காட்சியும் உள்ளூர் மக்களின் கற்கள் வீச்சும் எதார்த்தமாகவே இருக்கின்றன.
படத்தின் முக்கியமான குறை, வேகம். திரைக்கதையில் பரபரப்பை கூட்டியிருக்கலாம். முதல்பாதி முழு படத்தையே பார்த்த எண்ணத்தை தருகிறது. ஊகிக்கக்கூடிய காட்சிகள்தான் என்றாலும் இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. கிளைமேக்ஸ் முடிந்ததும் சிலர் கைதட்டும் சப்தம் கேட்டது. அதுதான் அமரனுக்குக் கிடைத்த வெற்றி. தீபாவளி வெளியீட்டில் கலக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்!