ஈரோடு ஜவுளிக்கடைகளில் அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்: அதிரடி தள்ளுபடி விற்பனையால் உற்சாகம்
ஈரோடு: ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க, இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது.
தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரமாக ஈரோடு விளங்குகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வாரம் தோறும், ஏராளமான வியாபாரிகள், ஈரோடு ஜவுளிச்சந்தையில், ஜவுளி கொள்முதல் செய்து வருகின்றனர். தீபாவளியை ஒட்டி, கடந்த ஒரு மாதமாக ஈரோட்டில் ஜவுளி விற்பனை களை கட்டி காணப்பட்டது.
இந்நிலையில், ஈரோட்டில் செயல்படும் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில், தீபாவளிக்கு அடுத்தநாள் (இன்று), ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்ற பெயரில், 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஜவுளி ரகங்களை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன்படி, இன்று அதிகாலை முதல் ஜவுளிக்கடைகள் நிறைந்துள்ள ஆர்.கே.வி.சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணி முதல் ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு, தள்ளுபடி விற்பனையில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று, அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால், ஈரோடு , கரூர் , நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், கடைவீதியில் திரண்டு, ஜவுளி ரகங்களை வாங்கிச் சென்றனர்.
புதிய ஜவுளிரகங்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் இந்த நடைமுறைக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தீபாவளி விற்பனைக்காக கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிரகங்களை முழுமையாக விற்பனை செய்யும் வகையில், அடக்க விலையில் ஜவுளி விற்பனையை மேற்கொண்டு வருவதாகம், 40 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்து வருவதாகவும், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.