மும்பை: மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.7 கோடி என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிப்பிக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அன்றைய தேதியின்படி மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9.6 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை(அக்.31) புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க |வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு
அதன்படி, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,70,25,119. இதில் 47,392 வாக்காளர்கள் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,70,25,119. இதில், 5,00,22,739 பேர் ஆண் வாக்காளர்கள், 4,69,96,279 பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 6,101 மூன்றாம் பாலினத்தவர்கள். 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 22,22,704 பேர். இவர்கள் முதல் முறை வாக்காளர்கள். 30-39 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,18,15,278.
அதே நேரத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 47,392 ஆக உள்ளது. இதேபோன்று 85-150-க்கும் இடைப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12,40,919. 120-க்கும் அதிகமான வாக்காளர்களின் எண்ணிக்கை 110. இதில் ஆண் வாக்காளர்கள் 56, பெண் வாக்காளர்கள் 54 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.