பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்த ட்வீட்டை தனது பதிவில் இருந்து நீக்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி ஐந்து தனித்தனி இழைகளாக (த்ரெட்ஸ்) ட்வீட்களைப் பதிவிட்டிருந்தார். அதில், மூன்றாவதாக இருந்த ட்வீட் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், “உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒவ்வொரு முறை பிரசாரத்திலும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் அதை நிறைவேற்ற முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள். இப்போது, மக்களின் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
காங்கிரஸ் தற்போது ஆட்சியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா வளர்ச்சிப் பாதையில் இருந்து சரிந்து, நிதி நிலைமை மோசமாகி வருகிறது. அவர்களின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இது அந்த மாநிலங்களுக்கு செய்யப்படும் வஞ்சகமாகும். இத்தகைய அரசியலால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் எமப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி இதற்கு அடுத்ததாக பதிவிடப்பட்ட ட்வீட்டை அழித்துவிட்டார்.
அதில், தவறான தகவலைக் குறிப்பிட்டதால் அந்த ட்வீட் அழிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது: கனடாவுக்கு இந்தியா கண்டனம்
மேலும், அடுத்தடுத்த ட்வீட்களில் “காங்கிரஸின் போலி வாக்குறுதி கலாச்சாரத்திற்கு எதிராக நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹரியானா மக்கள் காங்கிரஸின் பொய்களைப் புறக்கணித்து நிலையான வளர்ச்சிக்கான அரசினைத் தேர்வு செய்ததை சமீபத்தில் பார்த்தோம்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி உள்கட்சி அரசியலில் மும்முரமாக உள்ளது. வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தாமல் கொள்ளையடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தற்போதுள்ள அரசு திட்டங்களையும் திரும்பப் பெறப் போகிறார்கள்.
ஹிமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தெலங்கானாவில் விவசாயிகள் தாங்களுக்கு உறுதியளித்த கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர்.
முன்னதாக, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அவர்கள் வழங்கப்படுவதாகக் கூறிய உதவித்தொகையை ஐந்து ஆண்டுகளில் ஒருபோதும் செயல்படுத்தவில்லை. காங்கிரஸின் செயல்பாட்டுக்கு இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன” என மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம்கள் அறங்காவலர்களாக முடியுமா? ஓவைசி கேள்வி!
இதற்கு பதிலளிக்கு விதமாக பதிவிட்ட கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், “புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான கர்நாடகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) வளர்ச்சி 10.2% ஆகும். இது தேசிய சராசரியான 8.2% ஐ விட அதிகமாகும்.
இவை அனைத்து உண்மைகள். இந்த உண்மைகளுக்கு புள்ளிவிவரத் தரவுகள் உள்ளன.இவை, நம்பத்தகுந்த ஆதாரங்களால் ஆதரிக்கப்படும் தகவல்கள் ஆகும்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்தப் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள் மத்திய அரசுக்குச் சென்றடையுமா? அல்லது இந்த உண்மைகள் மத்திய அரசின் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கான ட்வீட்களை உருவாக்கும் நபர்களுக்குச் சென்றடையாதா?” என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.