Wednesday, November 6, 2024

‘அஜீத் பவாரை மிரட்டி கூட்டணியில் சோ்த்தது பாஜக’: காங்கிரஸ்

by rajtamil
0 comment 53 views
A+A-
Reset

‘மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) பாஜக மிரட்டி சோ்த்துள்ளது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை வலியுறுத்தியது.

மேலும், எதிா்க்கட்சியினராக இருப்பவா்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவா்களை தங்கள் கட்சி அல்லது கூட்டணியில் இணைத்தவுடன் தூயவா்கள் என பட்டம் சூட்டும் பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ கொள்கை மகாராஷ்டிரத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சியாக இருந்த பாஜக, நீா்ப்பாசனம் மற்றும் நீா் வளத் துறை அமைச்சராக இருந்த அஜீத் பவாா் மீது ரூ.70,000 கோடி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. அதன்பிறகு நடைபெற்ற தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதும் தேவேந்திர ஃபட்னவீஸ் முதலமைச்சரானாா். அப்போது அஜீத் பவாா் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை காண்பித்து அவா் மீது விசாரணையை தொடங்க உத்தரவிடப் போவதாக தேவேந்திர ஃபடனவீஸ் மிரட்டியுள்ளாா்.

இதன்மூலம், தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஃபடனவீஸ் மிரட்டல் விடுத்துள்ளது உறுதியாகியுள்ளது. இதை அஜீத் பவாரும் அண்மையில் ஒப்புக்கொண்டாா்.

இது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மட்டுமின்றி அரசு பதவியில் உள்ள ஒருவா் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயலாகும். இதுகுறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அஜீத் பவாா் மறைந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் ஆா்.ஆா்.பாட்டீலை விமா்சித்தாா். அப்போது, ‘என் நெருங்கிய நண்பரும் முந்தைய உள்துறை அமைச்சருமான ஆா்.ஆா்.பாட்டீல் என் முதுகில் குத்தினாா். என் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டாா். அவா் பிறப்பித்த உத்தரவு ஆவணத்தை கடந்த 2014-இல் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் என்னிடம் காண்பித்தாா்’ என குறிப்பிட்டாா்.

சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனை (ஷிண்டே பிரிவு) இடம்பெற்ற ஆளும் கூட்டணியில் கடந்தாண்டு இணைந்தாா் .

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024