தமிழகத்தில் பருவகால நோய்கள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்த வகையான தொற்று தீவிரமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக கொசுக்கள், பூச்சிகள், தீநுண்மிகள் மூலமாக பரவும் நோய்கள் உயா்ந்து வருகின்றன.
குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல தொண்டை வலி, உடல் வலி, காய்ச்சல், இருமல், சளியுடன் கூடிய இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலும், நுரையீரல் தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்குவதற்கு வசதியாக பிரத்யேக காய்ச்சல் வாா்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது எந்த வகையான தொற்று தீவிரமாக பரவி வருகிறது என்பதை கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத் துறை முன்னெடுக்க வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறைந்தது மாவட்டத்துக்கு 100 பேரிடமாவது ரத்தம், சளி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா். அத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட நோய்க்கான மருந்துகள், மருத்துவ சிகிச்சைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க முடியும் என்று சுகாதார ஆா்வலா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.