குமரி முழுவதும் ஒரே நாளில் 1,690 மிமீ மழை: மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் பழுதாகி போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 1,690 மிமீ. மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் பழுதாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (நவ.02) மதியம் முதல் இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள், கால்வாய்கள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 160 மிமீ., மழை பதிவானது.
மைலாடியில் 110 மிமீ., பெருஞ்சாணியில் 101, சுருளோட்டில் 100, புத்தன்அணையில் 98, தக்கலையில் 97, குருந்தன்கோட்டில் 91, பாலமோரில் 79, அடையாமடையில் 65 மிமீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1690.6 மிமீ., மழை பெய்திருந்தது. சராசரி மழை விகிதம் 65.02 மிமீ., ஆகும்.
நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு 778 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 42.46 அடியாக உள்ள நிலையில் 504 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. எந்நேரமும் உபரிநீர் அதிக அளவில் திறந்து விட வாய்ப்புள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 67.4 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 957 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 510 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு 1அணை நீர்மட்டம் 14.04 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து உபரிநீர் எந்நேரமும் திறந்து விட வாய்ப்புள்ளது.
கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, கோதையாறு, பழையாறுகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 9-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கனமழையால் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் தண்ணீர் புகுந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ரப்பர் தோட்டம், தென்னை தோப்புகளை வெள்ளம் சூழ்ந்தன. பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் தண்ணீர் புகுந்ததால் 54 பெண்கள், 14 சிறுவர்கள் உட்பட 115 பேர் கன்னியாகுமரி பேரிடர் பல்நோக்கு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கோதையாறு, மயிலாறு பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவற்றை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம் பகுதிகளில் பல இடங்களில் மழையால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியிருந்தது. நேற்று காலையில் மழை நின்று வெயில் அடித்த நிலையிலும் தண்ணீர் வடியாததால் பயணிகள் அவதியடைந்தனர்.